வீடு புகுந்து திருடிய விசைத்தறி தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆவரங்காடு பகுதியில் ராஜமாணிக்கம் என்ற விசைத்தறி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் அலமாரியில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை திருடி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார். இதனை பார்த்த ராஜமாணிக்கம் சத்தம் போட அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து தப்பி ஓட முயற்சித்த நபரை கையும் களவுமாக மடக்கி பிடித்து விட்டனர்.
இதனையடுத்து அந்த நபரை பொதுமக்கள் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் காந்திபுரம் பகுதியில் வசிக்கும் விசைத்தறி தொழிலாளியான சுப்பிரமணி என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.