10 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏட்டிபாளையம் கிராமத்தில் சௌரிராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பாத்திமா ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களின் இரண்டாவது மகளான பிரமியாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை பார்ப்பதற்காக வீட்டில் உள்ள அனைவரும் செய்யாறு சென்றுள்ளனர். இந்நிலையில் பாத்திமா ராணியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்து விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்கு திரும்பி வந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் பாத்திமா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடைகளை சேகரித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.