500 கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள அருணாப்பேரி மெயின் ரோட்டில் பூமணி என்ற தேங்காய் வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சங்கர் கணேஷ், ராமராஜன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பூமணி அவரது மனைவி மற்றும் மகன் ராமராஜனை அழைத்துக் கொண்டு மதுரைக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அவரது மகன் சங்கர் கணேஷ் என்பவரும் வெங்கடாம்பட்டிக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரையிலிருந்து பூமணி இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 500 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் பூமணி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 500 கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.