ஒர்க்ஷாப் உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விஜயலட்சுமி நகரில் முத்து என்பவர் வசித்துவருகிறார். இவர் சின்ன மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு முத்தூர் ஒர்க்ஷாப்புக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் தங்க நகை, அவருடைய லைசென்ஸ் மற்றும் மோட்டார் சைக்கிளின் ஆர்.சி புத்தகம் போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் முத்து புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகிய தடயங்களை சேகரித்து உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.