1 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜி.என்.மில் அதிஷ்டலட்சுமி நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐஸ் கிரீம் நிறுவனத்தின் டீலராக இருக்கிறார். இந்நிலையில் சீனிவாசனின் குடும்பத்தினர் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் தரை தளத்தில் இருக்கும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து விட்டனர். அதன் பிறகு அந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 1 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 வைர நெக்லஸ், 50 பவுன் தங்க நகை போன்றவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து காலையில் கண்விழித்து பார்த்த சீனிவாசன் நகைகள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சீனிவாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 1 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.