நூதன முறையில் பெண்ணிடமிருந்து 1 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள தட்டான் குளம் கிராமத்தில் இடைத்தரகரான மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் வசித்து வரும் மதியழகன் மூக்கையாவை சந்தித்து அவர் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு தள செங்கல் தேவைப்பட்டால் தான் குறைந்த விலைக்கு கொடுப்பதாகக் மூக்கையாவிடம் கூறியுள்ளார். இதனால் மூக்கையா அந்த தளங்களை பார்வையிட வந்தபோது, தட்டான் குளத்திற்கு மூக்கையாவை அழைத்து சென்று அவரை ஒரு இடத்தில் மதியழகன் இருக்க சொல்லியிருக்கிறார்.
அதன்பின் மூக்கையாவின் வீட்டிற்கு சென்ற மதியழகன் அவரது மனைவி பலவேசம்மாள் என்பவரை சந்தித்துள்ளார். அவரிடம் உங்கள் கணவர் மூக்கையா தளங்கள் வாங்குவதற்காக 1 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு வருமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். அதனை உண்மை என்று நம்பிய பலவேசம்மாள் அந்த பணத்தை கொடுத்தவுடன் மதியழகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த மூக்கையாவிடம் பலவேசம் மதியழகனிடம் தான் பணம் கொடுத்ததை தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த மூக்கையா இதுகுறித்து சாம்பவர் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.