போலீஸ் குடியிருப்பில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பி.ஆர்.எஸ் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருக்கும் குடியிருப்பில் நகீனா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆயுதப்படை பிரிவில் போலீசாராக வேலை பார்க்கும் நகீனா தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்கம், மடிக்கணினி, வெள்ளி பொருட்கள் போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் வெள்ளி பொருட்கள், 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.