அரசு ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீனம்பாக்கம் ராணுவ அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜி வேலைக்கு சென்றபிறகு கவிதா தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கவிதா அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம், 45 பவுன் தங்க நகை போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.