காரின் கண்ணாடியை உடைத்து வாலிபர்கள் 2 1/2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விசுவாசபுரம் ராஜீவ் நகரில் முன்னாள் ராணுவ வீரரான ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை காரணமாக ஜேம்ஸ் 50 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு காரில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து தோவாளையில் இருக்கும் ஒரு வங்கியில் இருந்து ஜேம்ஸ் 2 லட்சத்தை எடுத்து ஏற்கனவே கொண்டு வந்த 50 ஆயிரம் ரூபாயுடன் அதனை சேர்த்து ஒரு பையில் வைத்துள்ளார். அதன்பிறகு ஜேம்ஸ் காரில் ஆரல்வாய்மொழி நோக்கி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பாரத் ஸ்டேட் வங்கி முன்பு காரை நிறுத்திவிட்டு ஜேம்ஸ் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார்.
அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைந்து கிடந்ததை கண்டு ஜேம்ஸ் அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் மர்ம நபர் 2 1/2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து ஜேம்ஸ் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து பணப்பையை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.