அடுத்தடுத்து கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் செட்டிபாளையம் ரோட்டில் அரசு பேருந்து பணிமனை நிறுத்தம் எதிரில் ஜெராக்ஸ் கடை, செல்போன் கடை மற்றும் துணிக் கடைகள் இருக்கின்றன. இந்நிலையில் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் செல்போன் கடையில் 5 ஆயிரம் ரூபாயையும், சில செல்போன்களையும் திருடி விட்டு சென்றனர். இதனை தொடர்ந்து ஜவுளிக் கடையில் ஜீன்ஸ் பேண்டுகள் போன்ற துணிகளை கொள்ளை அடித்து விட்டனர். அதன்பின் அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் நிலையத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்ஜின் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெராக்ஸ் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அந்த காட்சியில் 2 மர்ம நபர்கள் தலையில் குல்லா அணிந்து முகத்தை மறைத்தபடி, கடையின் பூட்டை உடைத்து திருடியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கடைகளில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.