முகத்தில் மிளகாய் ஸ்பிரே அடித்து சாயப்பட்டறை உரிமையாளரிடமிருந்து 8 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்ணாங்கல்பாளையம் பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக சாயப்பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூர் பல்லடம் ரோடு வித்யாலயம் அருகில் இருக்கும் பாரத் ஸ்டேட் வங்கிக்கு பணம் எடுப்பதற்காக வெங்கடாசலம் சென்றுள்ளார். இதனையடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து 8 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து பையில் வைத்துக்கொண்டு வங்கிக்கு முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரை நோக்கி நடந்து சென்றுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வெங்கடாச்சலத்தின் முதுகில் ஓங்கி குத்தியதால் அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலம் திரும்பி பார்த்தவுடன் அவரது முகத்தில் மிளகாய் ஸ்ப்ரே அடித்து விட்டு பணப்பையை பறித்து கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து விட்டனர். இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் வெங்கடாசலம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.