வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் சரவணன் என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்று விட்டு மதிய வேளையில் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி கொலுசு போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டப்பகலில் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.