தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கெடார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துள்ளது. இதனால் கெடார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் சூரப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளிளை நிறுத்தியுள்ளனர். அதன் பின் அதில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் சாணிமேடு கிராமத்தில் வசிக்கும் ராஜபாண்டி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்றது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ராஜ பாண்டியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 21 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விட்டனர். அதன்பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் அவரை ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்து விட்டனர்.