ஏடிஎம் எந்திரத்தை மர்மநபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வடுகன்தாங்கல் ரைஸ்மில் தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர். ஆனால் பல மணி நேரம் முயன்றும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதனையடுத்து மர்ம நபர்கள் ஏடிஎம் எந்திரத்தை உடைத்த தகவல் தானியங்கி மூலம் வங்கிக்கு கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது எந்திரத்தின் ஒரு சில பகுதிகள் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் பணம் எதுவும் திருடப்படாததால் அந்த எந்திரத்தில் உள்ள ரூபாய் 4 லட்சம் பணம் அப்படியே இருந்தது. இச்சம்பவம் குறித்து வங்கி சார்பாக கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ATM மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது எந்திரத்தை மர்ம நபர்கள் உடைக்கும் காட்சியானது பதிவாகி இருந்தது. இதையடுத்து அங்கு வந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.