பட்டப்பகலில் வீட்டின் ஓட்டை பிரித்து நகையை கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாமக்கல் மாவட்டம் செல்லம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா சங்கீதா தம்பதியினர். ராஜா தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சங்கீதா ஊராட்சி ஒன்றியத்தில் மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறார். ராஜா தனது வேலை தொடர்பாக வெளியில் சென்றுள்ளார். சங்கீதாவும் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு பணிக்கு போய் விட்ட நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கொண்ட மர்மநபர்கள் ஓட்டை பிரித்து வீட்டினுள் இறங்கி பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகளை களவாடிச் சென்றுள்ளனர்.
பின்னர் மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய சங்கீதா மற்றும் ராஜா நகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் காவல் துறையினரிடம் சங்கீதா புகார் அளித்தார். சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் கிடைக்கின்றனவா எனவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பட்டப்பகலில் இந்த திருட்டு சம்பவம் நடந்தேறியது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.