கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து பணம் மற்றும் சால்வைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நேதாஜி சாலையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தினை மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் என்பவர் நிர்வகித்து வருகின்றார். இந்நிலையில் இந்த அலுவலகத்தின் ஜன்னல் வழியே உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சால்வைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து முரளிதரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணம் மற்றும் சால்வைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.