சப்-இன்ஸ்பெக்டர் தனது வீட்டில் 34 பவுன் நகைகளை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செல்லத்துரை திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் செல்லத்துரை தனது வீட்டில் 50 பவுன் நகையை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது சொந்த ஊரான தென்காசி செல்வதற்காக கடந்த மாதம் 20ஆம் தேதி இரவில் பீரோவில் இருந்த நகையை எடுத்து பார்த்தபோது அதில் 34 பவுன் நகை காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வீட்டுக்குள் பல இடங்களில் தேடியும் அந்த நகை கிடைக்கவில்லை என கூறியுள்ளார். இதனைதொடர்ந்து செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிந்து சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் காணாமல் போன நகைகளை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.