வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரங்கியூர் குச்சிப்பாளையம் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்துவருகிறார். இவர் செங்கல் சூளை நடத்தி வருவதால் தனது மனைவியுடன் சக்திவேல் அங்கு சென்றுள்ளார். அதன்பிறகு அந்த தம்பதிகள் வீட்டிற்கு திரும்பி வராமல் அங்கு இருக்கும் கொட் டகையிலேயே தங்கி உள்ளனர். இந்நிலையில் சக்திவேலின் மகன் சசிகுமார், மருமகள் மற்றும் அவர்களது குழந்தை என மூன்று பேரும் ஒரு அறையில் தூங்கி உள்ளனர்.
இதனையடுத்து செங்கல் சூளைக்கு சென்ற தனது அம்மா, அப்பா மீண்டும் வந்து விடுவார்கள் என்று நினைத்து வீட்டின் கதவை பூட்டாமல் சாத்திய நிலையில் வைத்துள்ளனர். அதன் பின் காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக சசிகுமார் எழுந்து வந்த போது, கதவு வெளிப்புறமாக பூட்டப் பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இவர் தனது நண்பருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவரை அழைத்து கதவை திறக்க வைத்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த இரும்பு பீரோ காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சசிக்குமார் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தும் அது கிடைக்கவில்லை. இதனை அடுத்து அந்த பீரோவை சசிகுமாரின் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு வயல் பகுதியில் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. மேலும் அந்த பீரோவில் இருந்த 32 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்கள் அதில் இருந்து 50,000 ரூபாயை அப்படியே விட்டுவிட்டனர்.
இந்நிலையில் வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கதவு திறந்திருந்ததால் உள்ளே புகுந்து பீரோவை தூக்கிச் சென்று 11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சசிகுமார் விழுப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வயல் வெளியில் கிடந்த பீரோவை மீட்டனர். அதோடு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.