சென்னையில் தனது பைக்கை திருடிய நபரை நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராமச்சந்திரன். 20 வயதான இவர் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சென்ற பிப்ரவரி மாதம் இரு சக்கர வாகனம் காணாமல் போனது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இவ்வாறு இருக்கையில், காணாமல் போன தனது இரு சக்கர வாகனத்தை நாமே கண்டுபிடித்துவிடலாம் என களத்தில் இறங்கி தேடியுள்ளார் ராமசந்திரன்.
இவ்வாறு இருக்கையில் ஆகாஷ் என்ற வாலிபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வதை ராமச்சந்திரன் பார்த்துள்ளார். இதை கண்டதும் ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர்களான அபிஷேக் தீனா சந்தோஷ் ஆகியோருடன் சேர்ந்து ஆகாஷை வலை வீசி தேடி வந்தனர். பின் சிக்கிய அவரிடம் வாகனம் குறித்து கேட்கும் போது என்னிடம் இல்லை என்று மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரனும் அவரது நண்பர்களும் கேகே நகரில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் கட்டிப்போட்டு உருட்டு கட்டையால் அடித்து உண்மையை கூறுமாறு துன்புறுத்தி உள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக ஆகாஷ் பரிதாபமாக உயிரிழக்க சம்பவம் குறித்து காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஆகாஷ் உடலை கைப்பற்றி விசாரணை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, 4 கல்லூரி மாணவர்களையும் கைது செய்தனர்.