தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்களை மலைத் தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் இருக்கும் தேயிலை தோட்ட 23-வது பிரிவில் தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் பறந்து வந்த மலைத் தேனீக்கள் தொழிலாளர்களை சுற்றி வளைத்து கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். மேலும் தொழிலாளர்கள் தங்கள் கையிலிருந்த சாக்கு போன்றவற்றை கொண்டு தேனீக்களை விரட்ட முயற்சி செய்துள்ளனர்.
ஆனாலும் தேனீக்கள் அவர்களை கொட்டிவிட்டு அங்கிருந்து பறந்து சென்றுள்ளது. இதில் சரஸ்வதி, தனலட்சுமி, மலர், ஜோதி உட்பட எட்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து தொழிலாளர்கள் கூறும்போது, மலை தேனீக்களின் கூடுகளை அதிகாரிகளின் அனுமதியோடு கலைக்க சம்மந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.