தேக்கு மரக்கட்டைகளை திருடி சென்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆனந்தநகர் பகுதியில் இம்மானுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆபிரகாம் என்ற மகன் உள்ளார். இவருக்கு சொந்தமாக புதிய துறைமுகம் சாலையில் குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி குடோனில் இருந்து ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதிப்புள்ள 100 தேக்கு மரக் கட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து ஆபிரகாம் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் தங்கமாரியப்பன், ராமகிருஷ்ணன், சுரேஷ் சம்சு மஜித், மாரியப்பன் ஆகிய 5 பேரும் தேக்கு மரக்கட்டைகளை திருடி சென்றது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.