தெலுங்கானா மாநிலத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு சொந்தமான இடத்தில் போலீசார் பறிமுதல் செய்த பணத்தை அக்கட்சியினர் பறித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் தப்பக் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக திரு ரகுநந்தன் ராவ் போட்டியிடுகிறார். அவருக்கு சொந்தமான மூன்று இடங்களில் சிட்டி பேட்டை போலீஸ் கமிஷனர் டேபிஷ் தலைமையிலான போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்நிலையில் போலீசாரிடம் இருந்து 12 லட்சம் ரூபாயை பாஜகவினர் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விவகாரத்தில் தொடர்புடைய தெலுங்கானா மாநில பாஜக தலைவர் திரு பண்டிசஞ்சய் குமாரை கைது செய்தனர். போலீசாரிடமே பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.