சென்னையில் உள்ள முதலிவாக்கம் மற்றும் கௌபாக்கம் பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது தண்ணீரில் இறங்கிச் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த சம்பவத்தை அமைச்சர் த.மோ. அன்பரசன் விமர்சித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியதாவது, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஆட்சி முடிவடையும் நேரத்தில் மட்டும்தான் டெண்டர் விடப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது எந்த ஒரு பணியையும் மேற்கொள்ளவில்லை. ஆட்சியில் இருந்த போது மக்களை நேரில் வந்து பார்வையிட்டு குறைகளை கேட்டறியாத எடப்பாடி பழனிச்சாமி தற்போது அரசியல் செய்வதற்காக மக்களை சந்தித்து செருப்பளவு உள்ள தண்ணீரில் நடந்து வந்துள்ளார். சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி கூறுவது போன்று எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கவில்லை.
ஆறுமுகம் நகர், திருவள்ளுவர் நகர், முகலிவாக்கம் மற்றும் கௌபாக்கம் பகுதியில் உள்ள கணேஷ் நகர் ஆகிய 3 இடங்களில் மட்டும் தான் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த பகுதியில் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகள் முதல்வரின் அறிவுறுத்தலின் படி நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மாங்காடு, பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் தண்ணீர் போரூர் ஏரிக்கு வரும் போது மதுரவாயிலில் உள்ள புறவழிச் சாலையில் தண்ணீர் வெளியேற உரிய கல்வெர்ட் அமைக்காததுதான்.
இதனால்தான் வருடம் தோறும் கொளத்துவாஞ்சேரி, சின்ன பணிச்சேரி, பரணி புத்தூர் மற்றும் ஐயப்ப தாங்கல் பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிப்படைகிறார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணம் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தான். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது கூட மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்து வந்தோம். ஆனால் ஆட்சியில் இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு உதவி செய்யாமல் தற்போது செருப்பளவு உள்ள தண்ணீரில் இறங்கி குறைகளை கேட்பது எப்படி சரியாகும்.
தற்போது மழை நீர் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்ய சென்றிருக்கிறார். அப்போதும் கூட சென்னையில் உள்ள பாதிப்புகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தொடர்ந்து என்னிடம் கேட்டு வருகிறார். முதல்வரின் ஆலோசனையின் படி தொடர்ந்து பாதிப்புள்ள பகுகளில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. மேலும் சீர்காழி பகுதியில் அதிக அளவில் மழை பெய்துள்ள நிலையில் அங்கு பாதிப்பு ஏதேனும் இருந்தால் அதை சரி செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்