தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா சிறையில் இருக்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா கடந்த ஒன்பது வருடங்களாக அந்நாட்டில் ஆட்சி செய்துள்ளார். இவர் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையின் போது ஜேக்கப் ஜுமா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் கோர்ட் அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேக்கப் ஜுமாவிற்கு 15 மாத கால சிறை காவலில் வைக்க அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி கடந்த மாதம் முதல் வாரத்தில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் ஜேக்கப் ஜுமாவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வன்முறையினால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜேக்கப் ஜுமாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சிறை அதிகாரி கூறுகையில் “ஜேக்கப் ஜுமா அவர்களுக்கு சிறையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவர்களின் தேவையை பூர்த்தி செய்ய ராணுவ சுகாதார அமைப்பின் உதவி தேவைப்படுகிறது. மேலும் ஜேக்கப் ஜுமாவின் உடல்நலம் குறித்த முழு தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை” என கூறியுள்ளார்.