சாக்கடை கால்வாய் அமைக்ககோரி தேங்கி நிற்கும் மழை நீரில் கிராமபெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள சேசம்பட்டி வன்னியர் தெரு மேல்வீதியில் இருக்கும் 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சாக்கடை கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் மழை பெய்து வருவதால் வீடுகள், சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சியளித்தது.
இதனால் ஆத்திரமடைந்த கிராமபெண்கள் தேங்கி நின்ற மழைநீரில் நாற்றுநட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் கூறியபோது, மழை நீரிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாக சாலையை சீரமைத்து, சாக்கடை கால்வாய் வசதி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.