தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் 6 ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அந்தந்த தொகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களுக்கு என அமைக்கப்பட்டடிருந்த வாக்குச்சாவடிகளில் சென்று வாக்களித்துள்ளனர். இதனையடுத்து மே இரண்டாம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இந்நிலையில் தென்காசி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை யு.பி.எஸ். கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அந்தத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 168 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 108 வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் அந்தத் தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க.,மக்கள் நீதி மையம், நாம் தமிழர்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் என மொத்தம் 18 பேர் அந்த தொகுதியில் போட்டியிட்டு உள்ளனர். அங்கு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது . அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.
இதனையடுத்து அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது அ.தி.மு.க. வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் ஆகியோர் மாறி, மாறி முன்னணி வகித்து உள்ளனர். அந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் 88 ஆயிரத்து 945 வாக்குகள் பெற்றிருந்தார். அதன்பின் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 89 ஆயிரத்து 315 வாக்குகள் பெற்று செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.