உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்கொரியாவில் நூரி என்னும் பெயர் கொண்ட ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது சொந்த நாட்டிலே தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். இதனை கொரிய நாட்டு விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் இணைந்து அங்குள்ள விண்வெளி மையத்தில் உருவாக்கியுள்ளனர். இந்த ராக்கெட் ஆனது 47 மீட்டர் நீளம் உடையது. இது சுமார் 1.6 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் சியோலில் இருந்து 310 மைல் தூரத்தில் கோஹுங் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள நாரோ விண்வெளி மையத்தில் இருந்து நேற்று ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் கணக்கிடப்பட்டதை விட ஒரு மணிநேரம் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
ஏனெனில் ராக்கெட்டின் வால்வுகளை பொறியாளர்கள் சோதனை செய்ததாலும் காற்று பலமாக வீசியதாலும் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிலும் இந்த ராக்கெட் பூமியிலிருந்து 372 முதல் 497 மைல் தூரத்தில் விண்ணின் சுற்றுப்பாதையில் 1.5 டன் எடை உடைய ‘டம்மி பேலோடு’ வெளியிடுவதில் வெற்றி அடைந்ததா, இல்லையா என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. மேலும் ராக்கெட்டின் முதல் கட்டமானது பூஸ்டர் நிலை ஆகும். இது ராக்கெட்டில் இருந்து பிரிந்து ஜப்பானின் தென்மேற்கு கடலில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்கே உள்ள பசிபிக் கடலில் விழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்பு மூன்றாவது கட்டமானது பேலோடை எடுத்து அதன் சுற்றுப்பாதையில் வைக்கும் வகையில் வடிமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக 1990 ஆம் ஆண்டிற்கு முன்னால் தென் கொரியா செயற்கைக்கோளை ஏவுவதற்கு அடுத்த நாடுகளை நம்பியிருக்க வேண்டியிருந்தது. தற்போது சொந்த நாட்டிலேயே தயாரித்து விண்வெளிக்கு செயற்கைக் கோளை அனுப்பும் பத்தாவது நாடாக மாறுவதற்கு முயற்சி செய்துள்ளது. இது குறித்து தென் கொரியா அதிகாரிகள் கூறியதில் “நாட்டின் விண்வெளி லட்சியங்களுக்கு ராக்கெட் திறன் மிகவும் முக்கியமானதாகும்.
குறிப்பாக தகவல் தொடர்பில் நன்கு மேம்படுத்தப்பட்ட செயற்கைக் கோள்களையும் இராணுவ உளவு செயற்கைக் கோள்களையும் அனுப்பும் திட்டங்களும் உள்ளது. வருகின்ற 2030ஆம் ஆண்டிற்குள் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த ஆண்டு மே மாதம் மற்றொரு ராக்கெட்டை விண்ணில் செலுத்த தென்கொரியா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தென் கொரியா கடைசியாக 2013-ம் ஆண்டு ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஆனால் அது ரஷ்யா நாட்டின் தொழில் நுட்பத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.