தென்னக ரயில்வே அறிவித்துள்ள புதிய விதிமுறையை கடைபிடித்தால் மட்டுமே இனி வரும் நாட்களில் இரு சக்கர வாகனங்களை ரயிலில் அனுப்ப முடியும்.
தென்னக ரயில்வே வெளியிட்ட புதிய விதிமுறைகளில், “முதலில் ரயிலில் அனுப்பப்படும் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் காலியாக இருக்க வேண்டும். மீண்டும் ஒரு முறை வாகனத்தை இயக்கி பார்த்து பெட்ரோல் டேங்கின் வளைவுகளில் ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லாததை உறுதி செய்ய வேண்டும். மேலும் பெட்ரோல் டேங்கின் மூடியை திறந்து வைத்து காற்றில் உலர வைக்க வேண்டும். பின்னர் இரு சக்கர வாகனத்தை ரயிலில் அனுப்புபவர்கள் விண்ணப்ப படிவத்தில் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் இல்லை என்பதை உறுதி அளிக்க வேண்டும்.
அதற்குப் பிறகு பார்சல் ரசீதில் விண்ணப்பதாரரின் உறுதிமொழியை ரயில்வே ஊழியர் பதிவு செய்வார். இருசக்கர வாகனத்தை ரயில்வே வரையறையின் படி சரியாக பேக் செய்து, வாகனப்பதிவு செய்யும் போது ஆர்சி புக்கின் நகலை ரயில்வே ஊழியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ரயிலில் கொண்டுவரப்பட்ட இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் இந்த புதிய விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்று” தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.