தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளமானது மாநகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குளத்தை சுற்றி உள்ள கடைகளில் இருக்கும் குப்பைகளை சிலர் குளத்திற்குள் வீசுகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தினர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தெப்பக்குளத்தில் இருந்த குப்பைகளை அகற்றி, அங்கு மின்விளக்குகளை அமைந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக இந்த தெப்பகுளத்தில் இருக்கும் மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் தெப்பக் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி சுகாதார அலுவலர் தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்களையும், உயிருடன் இருக்கும் மீன்களையும் பிடித்து ஆய்வு செய்துள்ளார்.
இதுகுறித்து சுகாதார அலுவலர் கூறும் போது ஆக்சிஜன் குறைபாடு மற்றும் தட்பவெப்ப நிலை காரணமாக விஷத் தன்மை ஏற்பட்டு மீன்கள் இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் தற்போது இருக்கும் தண்ணீரை வெளியேற்றி விட்டு புதிதாக தண்ணீர் நிரப்புவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.