தேனி மாவட்டத்தில் ஒரு பெண்ணை ஆபாசமாக சித்தரித்து யூடியூபில் பதிவிட்ட மதுரையை சேர்ந்த நபரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
சமீபத்தில் தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி மூலம் மதுரையை சேர்ந்த செல்வம் என்பவர் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் டிக்டாக் தடை செய்யப்பட்டதற்கு பிறகு மதுரை செல்வா என்று ஒரு யூடியூப் சேனல் உருவாக்கி வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதனையடுத்து இவர் சில மாதங்களாக பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தும், ஆபாசக் கருத்துக்களை பதிவிட்டும் வந்துள்ளார். இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு 32 வயது பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களிலும் யூடியூபிலும் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் தேனி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் மதுரை செல்வா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பியோடிய செல்வாவை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனையடுத்து தீவிர விசாரணையில் அவர் கோவையில் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து தேனிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த விசாரணையில் மதுரை செல்வா 3 யூடியூப் சேனலை உருவாக்கி அதில் பெண்களை பற்றி ஆபாசமாக கருத்துக்களை பதிவேற்றுவதையே வழக்கமாக செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவர் பதிவிட்ட வீடியோக்களை நீக்கும் பணியில் ஈடுபட்ட போலீசார் இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.