இயக்குநர் சசிகுமார் நடித்து செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி. ராஜா தயாரித்துள்ள ‘ராஜவம்சம்’ என்னும் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்குகிறார். இவர் இயக்குநர் சுந்தர் சியின் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்ததாக இயக்குநர் கதிர்வேலு தெரிவித்தார். மேலும் முதல் படத்திலேயே 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியது சவாலான விஷயமாக இருந்ததாகவும் கதிர்வேலு கூறினார்.
ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என 49 முக்கியக் கலைஞர்கள் நடித்துள்ளனர் என்றும் இயக்குநர் தெரிவித்தார்.
தமிழ்த் திரைவுலகில் இதுவரை 49 நடிகர்களை வைத்து படம் இயக்குவது இதுவே முதல் முறை என தெரிவித்த இயக்குநர், இது சசிகுமாரின் 19ஆவது படம் எனவும் வரும் பொங்கல் விருந்தாக இப்படம் திரைக்கு வருவதாகவும் தெரிவித்தார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்