அமெரிக்காவில் மிகவும் அரிய வகையான மூளையை தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் (Hillsborough County) உள்ள நபர் ஒருவர் மூளையை தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.. நெக்லேரியா ஃபௌலேரி (Naegleria fowleri) என்ற இந்த மிக நுண்ணிய அமீபா, மூளையில் தொற்றினை உண்டாக்கினால், ஒரே வாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் உயிரிழந்து விடுவார்கள்.
இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்தில் இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.. எனவே இதுபோன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என ஃபுளோரிடாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் ஹில்ஸ்பாரோ கவுன்டி மக்களுக்கு ஃப்ளோரிடா மாகாண சுகாதாரத்துறை ஜூலை 3ஆம் தேதி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, குழாய் தண்ணீர் அல்லது வேறு எந்த தண்ணீராக இருந்தாலும் மூக்கில் மட்டும் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.. ஏரி, ஆறு என திறந்தவெளி நீர் ஆதாரத்தையும் மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவாது என்ற போதிலும், கோடை காலமான ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் இந்த அமீபாவால் பாதிப்பு ஏற்படுகிறது.