தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலுடன் சேர்ந்து 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட நேர வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இதனிடையே பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்பட்டதன் காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திருவாரூரில் உள்ள ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்த போது வாக்குப்பதிவு எந்திரம் பழுது ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. இதை போலவே சேலம் எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி அரசு பள்ளி வாக்குச்சாவடியிலும், நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒடிரயம்புலத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டுள்ளது. மேலும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாக்களிக்க இருக்கின்ற பெரியகுளம் வாக்குச்சாவடியிலும் வாக்கு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.