திரிபுராவில் வறுமையால் ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை ரூ 5000த்திற்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் இருக்கும் பழங்குடியின கிராமங்களில் பசி, வறுமை அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாக அங்கு வசித்து வருபவர்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை, குழந்தையில்லா தம்பதியருக்கு துட்டுக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் உனாகோட்டி மாவட்டம் கைலாஷகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் இப்படி செய்து செய்து சிக்கியுள்ளனர். ஆம், அவர்கள் ஜனவரி 13 ஆம் தேதி பிறந்த தங்கள் ஆண் குழந்தையை வெறும் 5,000 ரூபாய்க்கு பிப்ரவரி 14 ஆம் தேதி விற்பனை செய்துள்ளனர். குழந்தை பிறந்து ஒரே நாளில் விற்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று அந்த குழந்தையை அவர்கள் மீட்டனர். ஏற்கனவே அந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்த நிலையில், 4-ஆவதாக பிறந்த ஆண் குழந்தையை விற்றுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அரசு விரிவான அறிக்கை அளிக்குமாறு கேட்டுள்ளது. வறுமையின் காரணமாகவே அந்த தம்பதியர் தங்களது குழந்தையை விற்றதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், வறுமையால் தான் அவர்கள் விற்பனை செய்துள்ளனர் என்பது உண்மையான காரணமாக இருக்காது என்றும், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம் என்றும், பிழைப்புக்காக குழந்தைகளை பெற்றோர்கள் விற்பது போன்ற நிலை திரிபுராவில் இல்லை என்றும் மாநில கல்வியமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார்.