கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 409ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கொரோனோவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 291 பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 129லிருந்து 114 ஆகக் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அது வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அரசின் வழிமுறைகளை கேரள அரசு பின்பற்றுகிறது. மத்திய, மாநில அரசுகளிடையே எந்த மோதலும் இல்லை என கூறியுள்ளார்.
இதனிடையே கொரோனா தாக்கத்தால் தடை செய்யப்பட்ட இடங்களை பாதிப்பில்லாத பகுதிகளாக அறிவிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. அதில் சிவப்பு மண்டல பகுதிகளில் அடுத்த 14 நாட்களில் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்றால் அதை ஆரஞ்சு மண்டலமாக மாற்றலாம். ஆரஞ்சு மண்டல பகுதிகளில் அடுத்த 28 நாட்களில் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்றால் அதை பச்சை மண்டலமாக மாற்றலாம். இந்த கணக்கெடுப்பை ஒவ்வொரு வார திங்கட்கிழமையும் மேற்கொள்ள வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.