தமிழக முதல்வர் கொரோனா அச்சுறுத்தலை சமாளித்து மக்களை காக்கின்றன பணியிலே இரவு, பகல் பாராது சுழன்று பணியாற்றுகின்றார் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.
உலகெங்கும் இதுவரை வரலாறு காணாத வகையில், மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தல், மனிதகுலத்திற்கு விடப்பட்ட ஒரு சவாலாக, இதுவரை இந்த உலகமக்கள் கண்டிராத, உயிருக்கு ஏற்பட்டு இருக்கிற ஒரு அபாயகரமான அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் தொற்று பார்க்கப்படுகின்றது, இது பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான அச்சுறுத்தல்களையும், சவால்களையும் ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகளில் மிகப்பெரிய வல்லரசு என்று சொல்லும் நாடுகள், பொருளாதாரத்தில் மிகப்பெரிய வலிமையான நாடுகள் எல்லாம் கொரோனா தொற்றை எதிர்கொள்வதில் திணறிக்கொண்டு இருப்பதை செய்திகள் வாயிலாக நாம் அறிகின்றோம்.
இந்த சூழ்நிலையிலே, இந்திய திருநாட்டில் அன்னை தமிழகத்திலே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், ஒரு சாமானிய முதலமைச்சராக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, வெற்றி பெற்று, ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்று, இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த மிகப்பெரிய சவாலை, அச்சுறுத்தலை சமாளித்து மக்களை காக்கின்றன பணியிலே இரவு, பகல் பாராது சுழன்று பணியாற்றுவதை இந்த தாய் நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 37 வருவாய் மாவட்டங்களில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளாக முதலமைச்சர் வழங்குகின்ற அறிவுரைகள், வழிகாட்டுதலின்படி மேற்கொண்டு வருகின்றோம். முதலமைச்சர் தலைமையில் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள், மூத்த அமைச்சர்கள் பல்வேறு கூட்டங்களை நடத்தினார். ஏறத்தாழ 15 முறை கொரோனா தடுப்பு பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மருத்துவர்கள் குழுவோடு ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஏழுமுறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தி களநிலவரங்களை கேட்டறிந்து முடிவுகளை தீர்க்கதரிசனமாக எடுத்து வருகிறார்கள். பிரதமர் உலகளாவிய ஒப்பீடுகளை எதிர்த்து வைத்த முதலமைச்சர்கள் ஆலோசனையில் நான்குமுறை பங்கேற்று முதலமைச்சர் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து மத்திய அரசின் வழிகாட்டுதல் பெற்றிருக்கிறார்கள். நிதி செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் அமைந்திருக்கின்ற வல்லுனர்கள் குழு பல்வேறு நிலவரங்களை உள்ளடக்கி ஆய்வு செய்து அறிக்கைகளும் கொடுத்திருக்கிறார்கள்.
தலைமைச் செயலாளர் தலைமையில் டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் மூலமாக, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்களிடம் ஆய்வுகளை மேற்கொண்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை வருமுன் காப்போம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நோய் உலகளவில் ஒரு புதிய நோயாக இருக்கின்ற காரணத்தினால், இந்த நோய்த்தொற்று பரவுகிற வழிமுறைகளை கண்டறிய ஆய்வுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கின்றது.
தொற்று ஏற்பட்டவர்களை காப்பாற்றுவதற்கான மருந்துகள் கண்டுபிடிப்பும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கின்றது. தடுப்பு நடவடிக்கைகளுக்காக விழிப்புணர்வின் மூலமாக முன்னெச்சரிக்கையாக இருங்கள் என்று அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.முதலமைச்சர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றார். தமிழகம் பாதுகாப்பான நிலையை உருவாக்குவதற்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.