கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என சிஎம்டிஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு சந்தை மூலம் ஆயிரக்கணக்கானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல கோயம்பேட்டில் இருந்த பூக்கடைகள் மாதரவாரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி கோயம்பேடு உணவு தானிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மே 13ம் தேதி வழக்கு தொடர்ந்தார். கோயம்பேட்டில் உணவு தானியங்கள் விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதால் பருப்பு, தானியங்கள் விலை உயர்ந்துள்ளது.
எனவே கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி துரைசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கேட்ட நிலையில் சிஎம்டிஏ செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ரவிச்சந்திரன் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என சிஎம்டிஏ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து தேவைப்படும் போது கடை உரிமையாளர்கள் கடையில் இருக்கும் பொருட்களை எடுக்க அனுமதி அளிக்குமாறு சொல்லி வழக்கை ஜூன் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.