முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், அதேபோல மதுபானக் கடைகளையும் திறக்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 32வது நாளாக அமலில் உள்ளது. 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 20ம் தேதி ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. மேலும், கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் இந்த ஊரடங்கு தளர்வு இல்லை என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மேலும் சில ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில், மாநில அரசு, யூனியன் பிரதேசங்களில் கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தில் பதிவு செய்த குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகள், மாநகராட்சி எல்லைக்கு வெளியே இருக்கும் கடைகள், நகராட்சியில் உள்ள கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சமூக விலகலைத் தீவிரமாகக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் இருக்கும் சில்லறை விற்பனைக் மளிகைக் கடைகள், குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஷாப்பிங் மால் அல்லாத சிறிய கடைகள் போன்றவற்றைத் திறக்கலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இந்த உத்தரவில், சலூன் கடைகளை திறக்கலாம் என்ற அனுமதியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சலூன் கடைகளை எப்போது திறக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா, “முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க எந்த உத்தரவும் இல்லை. மதுபானக் கடைகளையும் திறக்க மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என கூறியுள்ளார். உணவகங்களைத் திறக்க எந்த உத்தரவும் இல்லை” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
அதேபோல, ” கிராமப்புறங்களில், வணிக வளாகங்களைத் தவிர அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. நகர்ப்புறங்களில், கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர, அனைத்து தனித்தனி கடைகள், அக்கம் பக்க கடைகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் உள்ள கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன” என கூறியுள்ளார்.