“மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடும் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி நாகை திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இத்திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஒரு போதும் ஆதரவு அளிக்காது; மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு மட்டுமே ஆதரவு என முதல்வரே கூறியுள்ளார். அவர் கூறியதையே நானும் கூறுகிறேன்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் டிடிவி தினகரன் எதற்கும் பயனில்லாத கருவேலமரம். தனி மரம் தோப்பாகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணமாகியுள்ளது. தினகரன், சசிகலா தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள படுவார்கள்” என்று ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார் . .