நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை, இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று வரலாற்று சாதனைப் படைத்தது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளை சூப்பர் ஓவர் வரை சென்று இந்திய அணி வென்றது. கிட்டத்தட்ட கடைசி பந்துவரை இந்திய அணி தோல்வியடைந்துவிட்டோம் என்ற எண்ணமில்லாமல், போராடியது என்றே கூறலாம்.
இதனிடையே நாளை ஒருநாள் போட்டித் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசினார். அதில், “நான் கேப்டனாக பொறுப்பேற்றபோது எனது அணியை புரிந்துகொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது. எந்த நிலையில் இருந்தாலும், வெற்றிக்காகப் போராட வேண்டும், தோல்வி என்ற பேச்சுக்கே இடம்கொடுக்க கூடாது என்ற அணுகுமுறையோடுதான் முதல் நாளிலிருந்து இந்திய அணி செயல்பட்டு வருகிறது.
இந்தத் தொடரில் நாங்கள் 3-0 என்று தொடரைக் கைப்பற்றியபோதும், அனைத்து வீரர்களும் ஐந்து போட்டிகளையும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தனர். அதனால் தான் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற முடிந்தது. ஆனால் இந்த முடிவினைப் பெறுவதற்காக அதிகமாக உழைப்பைக் கொடுத்துள்ளோம். கிரிக்கெட் என்பதே கூட்டுமுயற்சி தான். அதனை சரியாக செயல்படுத்தி வருகிறோம்.
டி20 போட்டிகளுக்கும், ஒருநாள் போட்டிகளுக்கும் வேறுபட்ட அணுகுமுறையை கடைபிடித்துவருகிறோம். டி20 போட்டிகளைப்போல், ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாது. டி20 வகைப் போட்டிகளுக்கென தனி தேவை இருக்கிறது. இதில், உடல்ரீதியாகவும், முடிவெடுப்பதிலும் நீங்கள் அதிகம் சோதனை செய்யப்படுகிறீர்கள். இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் ஃபிட்டாக இருப்பதால் போட்டியில் வேகமாக முடிவுகளை எடுக்க உதவுகிறது” என்றார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் தொடங்கவுள்ளது.