தேனி மாவட்டத்தில் பூர்விக சொத்து கிடைக்காத மனவேதனையில் மளிகைக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள டி.சுப்புலாபுரத்தில் மகாராஜன்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள இவரது பூர்விக சொத்தினை பிரித்து தருமாறு மகராஜன் அவரது சகோதரர்களிடம் கேட்டுள்ளார். இதற்கு சகோதரர்கள் மற்றும் அவர்களது மகன்கள் இணைந்து மகாராஜனை தாக்கியுள்ளனர். இதனையடுத்து மகராஜன் ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாக அனுப்பிவைத்துள்ளனர். மேலும் பூர்விக சொத்தை வாங்க முடியாததால் மனமுடைந்த மகராஜன் அப்பகுதியில் உள்ள நல்லதங்காள் கோவில் அருகே வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக மகாராஜன் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.