அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். இன்றைக்கு வாக்களித்து நம்மை தேர்ந்து எடுத்திருக்கக்கூடிய மக்கள், ஒரு நம்பிக்கையுடன் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். நம்முடைய தேர்தல் முடிவு வந்து கொண்டிருக்கிறது, அப்போது பெரும்பான்மை இடங்களில் நாம் வெற்றி பெற்று விட்டோம், ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு நமக்கு எண்ணிக்கை வந்துவிட்டது.
அதற்குப் பிறகு நான் கோபாலபுரத்திலிருந்து லயோலோ கல்லூரிக்கு சென்று நான் கொளத்தூர் தொகுதியில் நின்று வெற்றிபெற்ற சான்றிதழ் பெறுவதற்காக சென்றேன். அதைப் பெற்றுக் கொண்டு நேராக நம் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முத்தமிழ் கலைஞருடைய நினைவாலயத்திற்கு நான் சென்றேன், மாலை வைத்து மரியாதை செய்தோம்.
வெற்றி செய்தியை அவரிடத்தில் ஒப்படைத்தோம். அதற்குப் பிறகு நான் வெளியே வருகின்ற, போது பத்திரிக்கை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு ஒரு சில கேள்விகளை கேட்டபோது, நான் சொன்னேன் திமுக வெற்றி பெற்றிருக்கிறது என்றால் வெற்றி பெற்றவர்களுக்கு எல்லோரும் இன்றைக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான் சொல்ல விரும்புவது, திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றி பெற செய்த மக்களுக்கு நான் நன்றி சொல்கிறேன், கூட்டணி கட்சிகளுக்கு வெற்றியை தேடி தந்த அத்தனை வாக்காளர் பெருமக்களுக்கும் நன்றி சொல்கிறேன், ஆனால் அந்த ஆட்சி எங்களுக்கு ஓட்டு போட்டு கொடுத்தவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்து நாங்கள் பணியாற்றுவோம். வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு ஓட்டு போடாமல் தவறிவிட்டோம் என்று வருத்தப்படக் கூடிய அளவிற்கு நம்முடைய பணி இருக்கும் என்று நான் அப்பவே சொன்னேன். ஆகவே இன்றைக்கு நாம் என்ன உறுதிமொழி தந்து இந்த ஆட்சிக்கு வந்தோமோ, அந்த உறுதிமொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது உங்களுக்கு நன்றாக தெரியும், ஆக எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ அதைவிட நம்பிக்கையாக இருக்கிறார்கள்.
பல மடங்கு நம்பிக்கை நம் மீது ஏற்பட்டு இருக்கிறது, அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. நாம் தான் இனி எந்த தேர்தலாக இருந்தாலும் நான் தான் வெற்றி பெறப் போகிறோம் என்ற நம்பிக்கை நம்மை விட மக்களுக்கு அதிகம் இருக்கிறது. அதற்கு உதாரணமாக உள்ளாட்சி தேர்தல் அதுவே ஒரு சாட்சியாக அமைந்தது என தெரிவித்தார்.