Categories
உலக செய்திகள்

பருவநிலை மாற்றம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை – கிரேட்டா காட்டம்

பருவநிலையையும் சுற்றுச்சூழலையும் காக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று உலக நாடுகளை இளம் பருவநிலை போராளி கிரேட்டா தன்பெர்க் கடுமையாக சாடியுள்ளார்.

சுவிச்சர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் டாவாஸ் 2020 உலக பொருளாதார மன்றத்தின் 50ஆவது கூட்டத்தில் புவி வெப்பமயமாதல் குறித்தும் பருவநிலை மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய இளம் பருவநிலை போராளி கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றம் குறித்து நாம் இன்னும் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று உலக நாடுகளை விமர்சித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கிரேட்டா தன்பெர்க், “நாங்கள் சுற்றுச்சூழலையும் பருவநிலையையும் காக்க போராடிவருகிறோம். ஆனால், இதுவரை அதற்குத் தேவையான எந்த நடவடிக்கையும் உலக நாடுகள் செய்ததாகத் தெரியவில்லை. நாம் பெரும் பிரச்னை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.

நமது சுற்றுச்சூழலைக் காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இதுவெறும் தொடக்கம்தான். எங்கள் குரல் கேட்கப்படுவதற்கும், மாற்றத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

எனது குரல் கேட்கப்படுவதில்லை என்று புகார் கூறும் நபர், நான் அல்ல. எனது குரல் எப்போதும் கேட்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் பிரச்னை என்னவென்றால், இளைஞர்களின் குரலும் அறிவியலின் குரலும் இங்கு முக்கியத்துவம் பெறுவதில்லை.

பருவநிலை மாற்றத்தை ஒரு முக்கிய பிரச்னையாக நாம் கருதாதவரை, எந்தவொரு முடிவும் கிடைக்காது. இப்போது பருநிலையும் சுற்றுச்சூழலுமே முக்கிய பிரச்னையாக உள்ளது. இப்படிபட்ட நிலமையை உருவாக்கிய இளைஞர்களுக்கு நன்றி” என்றார்

Greta Thunberg in Davos 2020

இந்த மாநாட்டில் பேசிய சாம்பியா நாட்டைச் சேர்ந்த18 வயதான நடாஷா வாங் மவன்சா, “எங்களது முந்தைய தலைமுறையினரிடம் அனுபவம் இருக்கலாம். ஆனால் எங்களிடம் புது சிந்தனைகளும் சக்தியும் பிரச்னைக்கான தீர்வுகளும் உள்ளன” என்று கூறினார்.

சால்வடார் நாட்டைச் சேர்ந்த கோமஸ்-கொலோன் கூறுகையில், “எங்களுக்குத் தேவையான மாற்றங்கள் நிகழ எங்களால் ஐந்து, 10, 20 ஆண்டுகள் எல்லாம் காத்திருக்க முடியாது. நாங்கள் ஒன்றும் எதிர்காலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. நாங்கள் நிகழ்காலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, எங்களுக்கு மாற்றங்கள் இப்போதே நிகழத் தொடங்க வேண்டும். எங்களால் இதற்கு மேல் காத்திருக்கமுடியாது” என்றார்.

Categories

Tech |