”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா”- வுக்கு தொடர்புடையவர்கள், தொடர்புடைய பகுதிகள் என 8 மாநிலங்களிலேயே நேற்று சோதனை நடைபெற்றது. ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சம்மந்தப்பட்ட பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதைத்தவிர துணை ராணுவத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு இடங்களிலே பாதுகாப்பு பணியிலே ஈடுபட்டிருந்தார்கள். டெல்லியை பொருத்தவரை நிசாமுதீன், ஜாமியா நகர் போன்ற இடங்களிலே கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேபோல சோதனை நடைபெற்ற மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏனென்றால் சென்ற வாரம் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” -வுக்கு எதிராக சோதனைகள் நடைபெற்ற பொழுது, அதை எதிர்த்து கேரளா – தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலே உள்ள அந்த அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதே போல நாட்டின் பல இடங்களிலும் அவர்கள் போராட்டம் நடத்திய பல இடங்களில் வன்முறை சம்பவம் ஏற்பட்டது. கேரளாவில் அரசு பேருந்து உடைக்கப்பட்டன. தமிழ்நாட்டிலேயே பல இடங்களிலே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடத்தப்பட்டுள்ளன. ஆகவே தான் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” என்கின்ற அமைப்பு வன்முறையை தூண்டக்கூடிய வகையிலும், வன்முறையிலும் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டி அதற்கு தற்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தடை விதிப்பு நடவடிக்கையால் ஏதேனும் சின்ன சலசலப்பு கூட ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. எந்தெந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது ? என கருதப்படுகிற இடம் அங்கெல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.