சேலத்தில் இன்று மதியம் 1 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சேலம் மாவட்டத்தில் வரும் சனி, ஞாயிறு நாட்களில் கடைகளை திறக்க அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல அத்தியாவசிய பொருட்கள் விற்கும் மளிகை கடைகள், சந்தைகள் என அனைத்தையும் முழுமையாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த நிலையில், நேற்று வரை தமிழகத்தில் சொர்ணவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 90 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 752 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக இருந்தது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் நேற்று வரை 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் சேலம் மாவட்டம் முழுவதும் இன்று மதியம் 1 மணி முதல் வரும் 27ம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், மருத்துவமனை மற்றும் மருந்தகங்கள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு நாட்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு வெளியே சுற்றுவோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளது.