இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்திய அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கியுள்ள நிலையில், நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், ‘அணியின் பேட்டிங்கில் எந்த குறையும் இருப்பதாகத் தெரியவில்லை. மைதானத்தின் தன்மையை பொறுத்தே பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளோம். குறிப்பாக அணியின் வேகப்பந்து வீச்சில் மாற்றங்கள் இருக்கும்’ எனத் தெரிவித்தார்.
மேலும், ராஜ்கோட் மைதானமானது கோட்லா மைதானத்தை விட சற்று வித்தியாசமானது எனவும், இது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் எனவும், டெல்லியில் விளையாடியதை விட ராஜ்கோட்டில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.