தேர்தல் விதிமீறல் தொடர்பாக பெண் வேட்பாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐயம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் சீவலப்பேரி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்நிலையில் ஐயம்மாள் முத்து நகர் பகுதியில் தேர்தல் விதிகள் மற்றும் தடுப்பு விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் பேரில் களக்காடு ஒன்றிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி லுக்மானுல் ஹக்கீம் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது வேட்பாளர் ஐயம்மாள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி ஊர்வலமாக சென்று பிரசாரம் செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அதிகாரிகள் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வேட்பாளர் ஐயம்மாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.