திண்டுக்கல்லில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் பெண் ஒருவர் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் தெருநாய்கள் மீதும் அன்பு செலுத்தி வரும் நாகலட்சுமி திண்டுக்கல் கணபதி அக்ரகாரத்தில் சேர்ந்தவர். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தெரு நாய்கள் மீது இரக்கம் காட்டும் இவர் கணபதி அக்ரகாரம், ராஜிவ்காந்தி தெரு, கபோலசமுத்திரம் தரைப்பகுதி, நாயக்கர் தெரு, காளிமுத்து பிள்ளை சந்து ஆகிய இடங்களில் திரியும் 40க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு நாள்தோறும் உணவு அளித்து வருகிறார்.
இதற்காக வீட்டிற்கு வாங்கும் அரிசி மட்டுமின்றி தானமாக பெறும் அரிசி என நாள்தோறும் 15 கிலோ அரிசி என உணவு சமைத்து நாய்களுக்கு வழங்குகிறார். இந்த சேவையை அவர் கடந்த ஐந்து வருடங்களாக செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மக்கள் நடமாட்டம் இல்லாததால் நாய்கள் உணவின்றி தவிப்பதாக கூறியுள்ள இந்த பெண்மணி தெரு நாய்களுக்கு உணவு வழங்குவதை வாழ்நாள் முழுவதும் கடமையாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.