பெண் மானை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உள்ள காலகட்டத்தில் மனிதர்கள் அவரவர் தேவைகளுக்காக காட்டை அழித்ததால் பருவ மழைகள் பெய்வதில்லை. இதனால் குளங்கள் வறண்டு விட்டதால் வன விலங்குகள் அனைத்தும் நகர்ப்புறங்களுக்கு தண்ணீர், உணவுகளை தேடி வருகின்றது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் ஏராளமான மான்கள் கோதபாளையம், தெக்கலூர், புதுப்பாளையம் உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் வசித்து வருகின்றது. இந்நிலையில் மான்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக நகர்ப்புறங்களுக்கு வரும்போது அங்குள்ள தெருநாய்கள் துரத்தி கடித்து வருவது வழக்கமாக இருந்துள்ளது.
அவ்வாறு அவிநாசி மங்கலம் சாலையில் ஒரு வயதுடைய மான் கொல்லம்காட்டுக்கு தண்ணீர் தேடி வந்துள்ளது. அப்போது அந்தமானை தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறியது. இதனால் மான் அந்த இடத்திலேயே இறந்துவிட்டது. இதனைப் பார்த்த அவ்வழியில் சென்ற மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்துவிட்டு அதன் உடலை காட்டுப்பகுதியில் புதைத்து விட்டனர்.