பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது என்பது நீண்டகாலமாகவே நடைமுறையில் இருக்கிறது. போதிய நிதி இல்லாமல் கடனில் சிக்கி தவிக்கும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து அதன் மூலமாக நிதி திரட்டும் வழக்கத்தை மத்திய அரசு கொண்டிருக்கிறது. அதனால் அந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வேலை பறிபோகிறது. இது போன்று அரசு துறையில் உள்ள பல்வேறு துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
மத்திய பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறையை சேர்ந்த இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் பொதுத் துறையில் இருக்கும் 13 வங்கிகளை ஐந்து வங்கிகளாக இணைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றை தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.